கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துவிதமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்துகள் அனைத்தும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் இந்தியா வந்த பல்வேறு வெளிநாட்டினரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அதில் கனடாவிலிருந்து மட்டும் 243 பேர் இந்தியாவில் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்தவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று காலை பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கத்தார் ஏர்வேஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தில் கனடாவைச் சேர்ந்த 243 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் தோஹா வழியாக கனடாவின் மாண்ட்ரியலுக்கு செல்லவுள்ளது என பஞ்சாப் மாநில சிறப்பு தலைமைச் செயலாளர் கேபிஎஸ் சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரசால் 19 ஆயிரத்து 984 பேர் பாதிக்கப்பட்டும், 640 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:எண்ணெய் உற்பத்தி நாடுகள் அவசரக் கூட்டம்