கடந்த சில நாள்களாக இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுபேதார் சத்னம் சிங் (குர்தாஸ்பூர்), சுபேதர் மந்தீப் சிங் (பாட்டியாலா), குர்பிந்தர் சிங் (சங்ரூர்), குர்தேஜ் சிங் (மான்சா) ஆகிய நான்கு பேர் வீர மரணமடைந்தனர்.
இதையடுத்து இவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் பஞ்சாப் மாநில அரசு, போரில் வீர மரணமடையும் வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறுகையில், "போரின் போது வீரமரணமடைந்த நமது வீரர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.50 லட்சமாக உயர்த்தியும், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது. நமது துணிச்சலான வீரர்களுக்கு எங்களால் முடிந்த ஒரு சிறு உதவி"என்று தெரிவித்தார்.
முன்னதாக, போரில் வீர மரணமடைந்த சுபேதார் சத்னம் சிங், மந்தீப் சிங் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ .12 லட்சமும், குர்தேஜ் சிங், குர்பிந்தர் சிங் ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.