மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு சாலைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 18 நாட்களாகப் போாரட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததை அடுத்து, நாளை (டிசம்பர் 14) முதல் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறை காவல் துணைத்தலைவராக இருந்த லக்மிந்தர் சிங் ஜக்கர், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது பணியை ராஜினாமா செய்தார். இதற்கான அதிகாரப்பூர்வமான கடிதத்தை தலைமைச் செயலருக்கு ஜக்கர் அனுப்பி வைத்துள்ளார். இத்தகவலை பஞ்சாப் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து லக்மிந்தர் சிங் ஜக்கர் கூறுகையில், “நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர் தான் காவல் அதிகாரி. இன்று எனக்கு எந்த பதவி கிடைத்தாலும், அதற்கு காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னை படிக்க வைத்ததன் மூலம் தான். எனவே, வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைதியாகப் போராடிவரும் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏற்கெனவே விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தனது பத்ம விபூஷண் விருதை மத்திய அரசிடம் திருப்பி அளித்துவிட்டார்.
அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் சுக்தேவ் சிங் திண்ஸாவும், விவசாயிகளுக்கு ஆதரவாக தனது பத்ம பூஷண் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் சிறந்த கவிஞராக கருதப்படும் சுர்திஜ் பத்தார் தனது பத்ம ஸ்ரீ விருதையும் அரசிடம் திருப்பி வழங்குவதாக அறிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்துக்கு உலக நாடுகளில் இருந்தும் நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலவச தடுப்பூசி வழங்கும் கேரள அரசு - பாஜக புகார்