புதுச்சேரி மாநிலத்தின் கல்வி, வேளாண் மற்றும் மின்துறை அமைச்சராக உள்ளார் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கமலக்கண்ணன்.
இவர் நேற்று தனது சொந்த தொகுதியான திருநள்ளாறு மேலசுப்ராயபுரம் மாதாகோவில் தெரு பகுதியில் இறந்துபோன மரியதாஸ் என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
அப்போது அமைச்சர் கமலகண்ணனை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு அமைச்சர் தங்கள் பகுதிக்குள் வரக் கூடாது என கூறி அமைச்சரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பதவிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் எங்க பகுதிக்கு என்ன செய்தீர்கள் என்றும், கரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்த சமயங்களில் தங்களை வந்து பார்த்து எந்தவித உதவியும் செய்யாமல் தற்போது தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஊருக்குள் எதற்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர்.
மேலும் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் மரணமடைபவர்களின் உடல்களை சுடுகாட்டு பகுதிகளில் அடக்கம் செய்ய செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை என்றும் அதனை பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் கமலக்கண்ணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இது தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி கேட்ட இளைஞர்கள் ஐன்ஸ்டின் ராஜ், லெனின் ராஜ் மற்றும் இயேசு ராஜ் ஆகிய மூவர் மீதும் திருநள்ளாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.