நம் அனைவருக்கும் கடல் மணலில் வீடுக்கட்டி, ஓடியாட விளையாடப் பிடிக்கும். குறிப்பாக, கடல் அலையைக் கண்டால் போதும் அதில் இறங்கி நனைய வேண்டும் என்று ஆசை வயது வித்தியாசமின்றிப் பிறக்கும். அப்படியொரு மகிழ்ச்சியைத்தான் கடற்கரையில் அடைய மாற்றுத்திறனாளி மாணவர்களும் விரும்பினர்.
சத்தியா சிறப்புப் பள்ளி மாணவர்களின் இந்த ஆசையை புதுச்சேரி ஆட்சியர் அருணின் கவனத்திற்குச் சிலர் கொண்டுசென்றனர். சாதாரண மாணவர்களைப் போல் மாற்றுத்திறனாளி மாணவர்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தைப் பெறுவதற்கு என்ன செய்ய முடியுமென சிந்தித்த அவர் உடனடியாக, புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக உயர் அலுவலர்களை அழைத்துப் பேசி இதனைச் சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் இறங்க உத்தரவிடுகிறார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக உயர் அலுவலர்கள், தன்னார்வலர்கள் எல்லோரும் இணைந்து ஒரு புதிய நாற்காலியை உருவாக்குகின்றனர். அதாவது, நிலத்திலும் பயணப்படும் வகையிலும் அதேநேரத்தில் தண்ணீரிலும் மிதக்கும் வகையான நாற்காலியை தயார் செய்யப்படுகிறது. இதனை பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு நேற்று புதுச்சேரி வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் ஆட்சியர் அருண் தொடங்கிவைத்தார்.