புதுச்சேரியில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 32 இடங்களில் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 11 தெருக்களுக்கு மட்டும் உள்ளூர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 11 தெருக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!
புதுச்சேரி: புதுச்சேரியில் 11 தெருக்களுக்கு மட்டும் இன்று (செப்டம்பர் 8) முதல் வரும் 14ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் மகாலட்சுமி நகரில் உள்ள 5ஆவது குறுக்குத்தெரு, சண்முகாபுரம் அண்ணாசாலை, வீமன்நகர் ஓடை வீதி, முதலியார்பேட்டை வள்ளலார் தெரு 2ஆவது குறுக்கு, உருளையன்பேட்டை செங்குந்தர் வீதி, விடுதலை நகர் ஜீ பிளாக், ஒதியஞ்சாலை புதுநகர் முக்கியசாலை, லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதிதாசன் வீதி, கிருஷ்ணாநகர் 14ஆவது குறுக்கு, கோரிமேடு ஜிப்மர் ஜீ குடியிருப்பு, ரெட்டியார்பாளையம் பூமியான்பேட் பாவாணர் நகர் ஆகிய 11 தெருக்களுக்கு உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் இன்று (செப்டம்பர் 8) முதல் வரும் 14ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மருத்துவ அலுவலர்கள் கண்காணிப்பார்கள், அனைத்துக் கடைகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். காய்கறி, மளிகைக் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும். வெளியாட்கள் யாரும் இந்த பகுதியில் அனுமதிக்கப்படமாட்டார்கள். விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.