இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
தற்போது ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள போதும் மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகின்றன. அதன்படி டெல்லியில் மீண்டும் பொதுப் போக்குவரத்தைத் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கைலாஷ் கஹ்லோட் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில பேருந்து நிலையங்களில் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன் அவர்களின் வெப்பநிலை பரிசோதித்துவருகிறோம். அதை விரைவில் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். பயணிகள் பத்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்ள டெல்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.