இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவருகிறது.
இந்நிலையில், இன்று காலை சரியாக 9.27 மணிக்கு பிஎஸ்எல்வி சி-45 என்னும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) எமிசாட் (EMISAT) என்னும் மின்னணு நுண்ணுறிவு செயற்கைக்கோள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.
மேலும், சதீஷ் தவான் ஏவுதளம் அருகே இஸ்ரோவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பான தனி அறையிலிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனைக் கண்டுகளித்தனர். பொதுமக்கள் நேரடியாக ராக்கெட் பாய்ந்ததை பார்த்தது இதுவே முதல்முறையாகும்.