உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஷா நவாஸ் ஆலம் நேற்று (ஜூன் 29) நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுப் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்ப உறுதி பூண்டுள்ளனர். பாஜக அரசு பிற கட்சிகளின் குரல்களை அடக்குவதற்கான ஒரு கருவியாக காவல்துறையைப் பயன்படுத்தலாம். ஆனால் எங்கள் கட்சியினரின் (காங்கிரஸ்) குரலை அடக்க முடியாது.
உத்தரப் பிரதேச காவல்துறையினர், எங்கள் சிறுபான்மை பிரிவின் தலைவரை நள்ளிரவில் எவ்வாறு கைது செய்துள்ளனர் என்பதை பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஷா நவாஸ் ஆலம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் அதில் இணைத்துள்ளார்.
மேலும், மற்றொரு ட்வீட்டில், "முதலில், நமது மாநிலத் தலைவர் (அஜய் குமார் லல்லு) பொய்யான குற்றச்சாட்டில் நான்கு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காவல் துறையின் இந்த நடவடிக்கை, அடக்குமுறையானது; ஜனநாயக விரோதமானது. காங்கிரஸ் தொண்டர்கள் இதுபோன்ற காவல் துறையினரின் அடக்குமுறைகளுக்கும் பொய்யான நடவடிக்கைகளுக்கும் என்றும் அஞ்சுவது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஷா நவாஸ் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் மூலம் லாபம் ஈட்டுவதை அரசு நிறுத்த வேண்டும்' - ராகுல் காந்தி!