புதுச்சேரி மின் துறை தொழிலாளர்கள், மின் துறை தனியார்மயமாக மாற்றக் கூடாது என கடந்த ஆண்டு மே மாதம் முதல் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இது குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் துறை தனியார்மயமாக மாற்றக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த நவம்பர் 23ஆம் தேதி புதுச்சேரியில் மின் துறையைத் தனியார்மயமாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இதைக் கண்டித்து மின் துறை தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன. 11) காலை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து, புதுச்சேரி திப்ராயபேட்டை தலைமை மின்துறை அலுவலகத்தில் துறை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் மின்கட்டணம் செலுத்தும் அலுவலகம் மூடப்பட்டது.