அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தில் முதல் நாளான பிப்.24ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லவுள்ள ட்ரம்ப், அங்கு பிரதமர் மோடியுடன் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொள்ளப் போவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத் விமான நிலையத்தில் தொடங்கும் இந்தப் பேரணி சுமார் 10 கி.மீ., தூரம் பயணித்து சபர்மதி ஆசிரமத்தில் நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியை போன்று இந்தப் பேரணி மிக பிரம்மாண்டமாக இருக்கும் எனத் தெரிகிறது. பேரணியைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப்பார்க்கவுள்ள அமெரிக்க அதிபர், பிரதமர் மோடியுடன் சேர்ந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்துவைக்க உள்ளார்.
முன்னதாக, இந்தியாவுக்கு வருகைபுரிந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் நதென்யாகு ஆகியோருக்கு அகமதாபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மூன்று தலைவர்களும் பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ?