டெல்லி: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சனிக்கிழமை (செப்.5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்குவார். ஒவ்வொரு ஆண்டும் கல்வி அமைச்சகத்தினால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் அசாதாரண மற்றும் சிறப்பான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காணப்படுவதால், ஆசிரியர்களுக்கான விருதுகள் காணொலி காட்சி வாயிலாக வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆசிரியர்களுக்கு வழங்குவார். இந்நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கல்வித்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
இந்த விருதுகள் வழங்கும் விழாவுடன் தொடர்ந்து, கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் இணைந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்வி கொள்கை 2020 இன் முக்கிய அம்சங்கள் குறித்து ஆன்லைன் கருத்தரங்கமும் நடக்கிறது.
இதையும் படிங்க: 'நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பணி பெரும் பங்கு வகிக்கிறது' - பன்வாரிலால் புரோகித்