“உயர்கல்வியை மாற்றுவதில் புதிய கல்விக் கொள்கை - 2020இன் பங்கு” என்ற தலைப்பில் மாநில ஆளுநர்கள், கல்வி அமைச்சர்கள், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ளும் காணொலி மாநாடு நாளை (செப்.07) நடைபெறவுள்ளது.
மேலும், பிரதமர் மோடி எண்ணிய வகையிலான சுயசார்பு இந்தியாவை வழிநடத்துவதில் இந்தக் கல்வி முறையின் பங்களிப்பு குறித்தும் இம்மாநாட்டில் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
நாளை காலை 10.30 மணியளவில் தொடங்கும் இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மேலும், தேசிய கல்வி கொள்கை 2020இன் பல அம்சங்கள் குறித்த பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து முன்னதாக “தேசிய கல்விக் கொள்கை -2020இன் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.