நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.
சுதந்திரத்திற்கு பிறகு, ராணுவ வீரர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் தேசிய போர் நினைவிடம் கட்டப்பட்டது. இதை, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, நாட்டு மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைதியான வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் எது நடந்தாலும் தகுந்த பதிலடி தரும் திறனும் நமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.