இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வைரசைக் கட்டுப்படுத்தும்வகையில் மருத்துவப் பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காகச் சேவை செய்துவருகின்றனர்.
ஆனால், நாட்டின் பல்வேறு இடங்களிலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த இக்கட்டான நிலையிலும் தன்னலமற்று செயல்பட்டுவரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிசெய்யும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, அவசர சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அதன்படி, தாக்குதல் நடத்துபவர்கள் பிணையில் வெளிவர முடியாத அளவு இச்சட்டத்தில் அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலுக்குள்ளாகும் மருத்துவப் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்தில் ஈடுபடவர்கள் மீது குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மருத்துவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் கடுமையாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதங்களிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும் அபாராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சோனியா மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: காங்கிரஸ் கடும் கண்டனம்