உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே குறித்தும், நீதிமன்றம் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது எனக் கூறி வழக்கறிஞர்கள் சிலரே உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பிரசாந்த் பூஷண் இவ்வழக்கில் குற்றவாளி என அறிவித்து அவர் மன்னிப்பு கேட்க கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால், அவர் மன்னிப்பு கோரமுடியாது எனக் கூறியதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாளை அவ்வழக்கின் தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்யவேண்டும் என சட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் விமர்சனத்திற்கு நீதித்துறை பதிலளிக்கவேண்டுமே தவிர, அவருக்கு தண்டனை வழங்கக்கூடாது.
பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரண்டு ட்வீட்களும் நீதிமன்றத்தின் புனிதத்தை பாதிக்காது. நீதியைக் கோறும் அன்பின் வெளிப்பாடாகத்தான் அந்த ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளில் நீதிபதிகள் அரசுக்கு சாதகமாக இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இதுதான் மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது. இதுகுறித்து தான் நீங்களும், உங்கள் சக நீதிபதிகளும் வருத்தப்படவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:'பிரசாந்த் பூஷணின் பதிவுகள் வேதனை தருகின்றன'- நீதிபதி மிஸ்ரா