டெல்லி:முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆக.10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
முன்னதாக, பிரணாப் முகர்ஜி பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் ட்வீட் செய்திருந்தனர்.
ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜியை தொடர்புகொண்டு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள அவர், பூரண குணமுற்று விரைந்து வீடு திரும்ப என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும், “முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோவிட்-19 பாதிப்பிலிருந்து விரைவாக மீள வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.