மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே 2008ஆம் ஆண்டு குண்டிவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் என்று குற்றம்சாட்டபட்ட பிரக்யா சிங் தாகூர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் பிரக்யா!
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரக்யா, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த சூழலில், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு ஜூன் 3 - 7ஆம் தேதிக்குள் பிரக்யா ஆஜராக வேண்டும் என தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விலக்கு அளிக்கக்கோரி பிரக்யா கோரிக்கை விடுத்தார். தகுந்த காரணங்கள் இல்லாமல் விலக்கு அளிக்க முடியாது எனக் கூறி கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதனையடுத்து பிரக்யா இன்று மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி பல கேள்விகளை முன்வைத்தார். இதுவரை எத்தனை சாட்சியங்களை விசாரித்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, எனக்கு தெரியாது என பிரக்யா பதிலளித்தார். இப்படி கேட்கபட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்ற பதிலையே பிரக்யா நீதிபதியிடம் கூறியுள்ளார்.