புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, பிற மாநிலங்களில் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இலவச அரிசியை தடுத்த நிறுத்துவது ஏன்?அதற்கான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு அளித்தது யார்? இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்க நடவடிக்கை எடுத்த கிரண்பேடியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கும் வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகமும் மதிப்பதில்லை. கிரண்பேடியும் மதிப்பதில்லை. மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு. அரசியலமைப்பை மீறி கிரண்பேடி எப்படி செயல்பட முடியும். அவர் அதிகார துஷ்பிரயோகத்தின் கடைசி எல்லை வரை சென்றுவிட்டார்.
மாநில தேர்தல் ஆணையரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்தது. அவரை நீக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் ஏது? கிரண்பேடி தனக்கு வேண்டிய தேவநீதி தாஸை தேர்தல் ஆணையராக நியமிக்க என்னென்ன செய்யமுடியுமோ அனைத்தையும் செய்கின்றார். அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி பல்வேறு பிரிவுகளில் மத்திய அரசு விருது வழங்கிய நிலையில், அரசின் செயல்பாடு குறித்து அவர் எங்களுக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை. அவரைக் குறித்து கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளேன்” என்றார்.