கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறப்பது குறித்து, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில், மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலர் அசுவின் குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முதற்கட்டமாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கவும், அதேபோல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதி பள்ளிகள் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் மேலும், அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி பயன்படுத்துவது, தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை உறுதிசெய்வதோடு, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி, மதிய உணவு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோரின் கையொப்ப உறுதி பெற்ற பிறகே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், அவ்வாறு பள்ளிவரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யும்போது ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் சிறப்பு கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிக்கவும், கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மட்டும் தற்போது திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஐடிகளில் சேர நடைபெற்றுவரும் ஜே.இ.இ தேர்வு!