வெளிமாநில மீன்களை விற்கக் கூடாது - புதுச்சேரி மீனவர்கள் போராட்டம் - புதுச்சேரி மீனவர்கள் போராட்டம்
புதுச்சேரி: வெளிமாநில மீன்களை விற்கக் கூடாது எனப் புதுச்சேரி மீனவர்கள் மீன் அங்காடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் காந்தி வீதியில் ஒரு மீன் அங்காடியும் கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய மீன் அங்காடியும் செயல்பட்டுவருகின்றன.
இந்த அங்காடியில் வெளி மாநிலங்களிலிருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி மீனவர்கள் மீன் அங்காடிகளில் புதுச்சேரி மீன்களை விற்க அனுமதி கேட்டனர்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மீன் அங்காடியில் அங்குள்ள மீனவர்கள் வெளிமாநில மீன்களை மட்டும் வாங்குவதாகவும் புதுச்சேரி மீன்களைத் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டிக்கும் வகையில் புதுச்சேரி, தேங்காய்த்திட்டு, வீராம்பட்டினம் பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மீனங்கடி முற்றுகையிட்டு புதுச்சேரி மீனவர்களின் மீன்களை மட்டும் விற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அங்குள்ள மீன் வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வெளிமாநில மீன்களை அனுமதிக்க மாட்டோம் என உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மீன் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.