டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட பல்வேறு மனுதாரர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில்பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஷேக் முஜ்தாபா பாரூக்காக வழக்காடும் மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில்,"பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குரலில் பேசுகிறார்கள்; தாக்குதல் நடத்துபவர்களை ஊக்குவித்தல், உதவுதல், ஆதரித்தல், பாதுகாத்தல், உதவி செய்தல் ஆகியவற்றி காவல் துறை வகுப்புவாதப் போக்கோடு நடந்துகொண்டது.
பிப்ரவரி 23ஆம் தேதி அன்று பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகளைத் தொடர்ந்து வகுப்புவாத தாக்குதல் தொடங்கியது. முக்கியத் தாக்குதல்கள் பிப்ரவரி 23ஆம் தேதியில் தொடங்கி, 26ஆம் தேதி வரை நடந்தன. இந்தக் காலகட்டத்தில் 54க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. வழிபாட்டுத் தலங்களான 19 மசூதிகள், 2 மதரஸாக்கள், 3 சிவாலயங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களை அடுத்து ஏராளமான நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல் துறையினரால் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) பற்றி கூறும் பிரமாணப் பத்திரம், ”சட்டப்படி அரசின் எந்தவொரு வலைதளத்திலும் டெல்லி கலவரம் சம்பவத்தை அடுத்து போடப்பட்ட எப்ஐஆர்கள் எதுவும் பதியப்படவில்லை. இது உண்மை வெளிவரா நிலைக்கு வழிவகுத்திருக்கிறது. எனவே, டெல்லி காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்ஐஆர்களையும் டெல்லி காவல் துறையின் இணையதளத்தில் பதிய உத்தரவிட வேண்டும். மேலும், வன்முறையின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.