கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் மூன்று முக்கிய நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அவற்றைப் பார்வையிடும் வகையில், குஜராத் மாநிலம் சங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சைடஸ் கடிலா ஆய்வகத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.
கரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி! - Bharat Biotech
ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள பாரத் பயோடெக் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுவருகிறார்.
இதனைத் தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்த கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசியின் ஆய்வுப் பணிகளைப் பார்வையிடும் வகையில் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து புனேவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆய்வகத்திற்கு அவர் செல்லவுள்ளார்.
செரம் நிறுவனம் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியைத் தயாரித்துவருகிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவுக்கு எதிரான போரின் முக்கியக் கட்டத்தை இந்தியா நெருங்கியுள்ளது. தயாரிப்புப் பணிகள், சவால்கள், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளிப்பார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.