லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்தும், எல்லை விவகாரங்கள் குறித்தும் முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் இறக்கும் தருவாயிலும் நாட்டிற்காகப் போராடினர். அவர்களது தியாகத்தைக் கருத்தில்கொண்டு ஜனநாயக முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்தில் தற்போது பிரதமர் உள்ளார்.
சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிந்திடக்கூடாது. இந்திய இறையாண்மையை சமரசம் செய்துகொள்ளும் எவ்வித நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுவிடக் கூடாது. சீனா தங்களது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தும்விதமாக பிரதமர் எவ்வித சொற்களையும் பயன்படுத்திவிடக் கூடாது. எல்லை விவகாரங்கள் குறித்து பேசும்போது பிரதமர் பதவியில் இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொற்களில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.