தாவனகரே (கர்நாடகா): கர்நாடகாவின் தாவனகரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். கோவிட்-19 முழு ஊரடங்கின்போது விவேகானந்தின் குடும்பத்தினர் வீட்டில் முடங்கியதால், அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு முகக்கவசங்களை தயாரிக்கத் தொடங்கினர்.
ஊரடங்கின்போது அவர்கள் குடும்பம் கிட்டத்தட்ட 8,000 முகக்கவசங்களை தைத்தது. இதில் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்கள் இருந்தன.
பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட 7,000 முகக்கவசங்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பெரும் தேவை காரணமாக, அவர்கள் மீண்டும் 1,000 முகக்கவசங்கள் தைத்து பெயரளவுக்கு விற்றனர்.
இதற்கிடையில், விவேகானந்தனின் மகள்கள் காவ்யா மற்றும் நம்ரதா ஆகியோர் 20 ஆரஞ்சு, 10 வெள்ளை மற்றும் 10 பச்சை வண்ண முகக்கவசங்கள் அடங்கிய ஒரு பார்சலை ஸ்பீட் போஸ்ட் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தனர்.
காவ்யா ஆகஸ்ட் 13 ஆம் தேதி நரேந்திர மோடிக்கு பார்சலை அனுப்பினார். ஆனால் மூன்று வாரங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. பார்சல் பிரதமரை எட்டவில்லை என்று குடும்பத்தினர் நினைத்தனர். ஓரிரு நாள்களுக்குப் பிறகு, காவ்யாவின் நண்பர் கவிதா தேவி தயாரித்த முகக்கவசங்களை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருக்கும் புகைப்படத்தை அனுப்பினார்.