நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்துவந்த அயோத்தி வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, சன்னி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், தீர்ப்பு வழங்கிய மூன்று மாதத்திற்குள் அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கி, அதற்குத் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் என்பவரையும் உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமித்தது.
கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அறக்கட்டளை மேற்கொண்டிருந்த வேளையில், கரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கோயில் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. கடந்த ஜூன் மாதம் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கோயில் கட்டுவதற்கான திட்ட வரைவை அறக்கட்டளைக் குழு உருவாக்கிவந்தது. இச்சூழலில், நேற்று மகந்த் கோபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் பேசிய அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், 5 குவிமாடங்களுடன் 161 அடி உயரத்தில் ராமர் கோயில் எழுப்பப்படவுள்ளதாகவும், ஆகஸ்ட் 3 அல்லது 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் பூமி பூஜைக்கு அழைப்பு விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும், கோயில் கட்டுவதற்கான திட்ட முன்மொழிவை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.