டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவில் மத்திய அரசு, ’சென்ட்ரல் விஸ்டா’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றதிற்கு புதிய கட்டடம், மத்திய அமைச்சகங்களுக்கான கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட கட்டடங்கள் அமைய உள்ளன.
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம் இடப்பற்றாக்குறையில் இயங்கிவருவதாலும் அது நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இல்லை என்பதாலும் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்ட முடிவுசெய்யப்பட்டது. முக்கோண வடிவில் அமையவுள்ள இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் சுமார் ஆயிரத்து 200 பேர் வரை அமரலாம்.