'யாரும் தொடமுடியாத இடத்தை நாம் தொட முயற்சித்தோம்' - விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்திய நரேந்திர மோடி! - நரேந்திர மோடி
பெங்களூரு: சந்திரயான்-2 திட்டம் நமக்கு பின்னடைவு கிடையாது, எதிர்காலத்தில் இன்னும் நாம் தொடர வேண்டிய வெற்றிகள் பல உள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி எனர்ஜிட்டிக் டானிக் ஊட்டிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில், இன்று காலை 8 மணிக்கு அனைத்து அறிவியல் அறிஞர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றினார். அதன் தொகுப்பு...
- 'பாரத் மாதா கி ஜே' என்று கூறி உரையைத் தொடங்கிய நரேந்திர மோடி, இஸ்ரோ அறிவியல் அறிஞர்கள் மனம்தளர வேண்டாம்; இது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல, இந்தியாவே உங்களை நினைத்து பெருமைப்படுகிறது.
- சந்திரயான்-2 திட்டத்திற்கு இங்கு இருக்கும் அனைத்து அறிவியல் அறிஞர்களும் பல நாட்களாக தூக்கம் மறந்து, நாட்டின் கனவை நிறைவேற்ற அயராது உழைத்துவந்தீர்கள். தற்போது உங்கள் முகங்களில் இருக்கும் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதைக் கலைக்கத்தான் நான் இங்கு வந்தேன்.
- இது நமக்கு பின்னடைவு கிடையாது, நாடு உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நாம் தொடர வேண்டிய வெற்றிகள் பல உள்ளன. மேலும் யாரும் தொடமுடியாத இடத்தை நாம் தொட முயற்சித்தோம் அதுவே மிகப்பெரிய வெற்றியாகும்.
- உங்களைப் போல் இந்திய மக்கள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண மிக ஆர்வமாக இருந்தனர், ஆனால் இப்போது ஒட்டுமொத்த இந்தியர்களும் உங்கள் துயரத்தில் பங்குகொண்டு உங்களுடன் நிற்கிறோம்.
- சந்திரயான் திட்டத்திற்கு உழைத்ததின் மூலம், நிலவை தொடுவதற்கு நம் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
- நீங்கள் அதீத திறமை வாய்ந்தவர்கள். இந்திய வெற்றிக்கு உங்கள் பங்கு அளவற்றது, மேலும் சந்திரயான் திட்டத்தால்தான் உலக நாடுகளுக்கு நிலவின் தென்துருவத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.
- நம் வரலாற்றை திரும்பி பார்த்தோமென்றால், இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை நாம் பல கடந்து வந்துள்ளோம், அப்போதெல்லாம் நாம் ஒரு நாளும் தைரியத்தை கைவிட்டதில்லை அதேபோன்று இப்போதும் நாம் இருக்க வேண்டும்.