உலகெங்கிலும் கரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொள்ளும் வகையில், தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் சர்வதேச தடுப்பூசி கூட்டணி உச்சிமாநாடு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனால் லண்டனில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. அப்போது, “உலகெங்கிலும் உள்ள நாடுகளை சேர்ந்த மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், எதிர்காலத்தில் தொற்று நோய்களிலிருந்து உலகைப் பாதுகாப்பதற்கும் தடுப்பூசிகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்” என போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
மேலும், "இன்றைய சவாலான சூழலில், இந்தியா உலகத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். குறைந்த விலையில் தரமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான எங்களின் திறன், நோய்த்தடுப்பு மருந்துகளை விரைவாக விரிவாக்குவதில் சொந்த அனுபவம் மற்றும் நமது கணிசமான அறிவியல் ஆராய்ச்சி திறன்கள் அனைத்தும் உள்ளன” என்றார்.
2025 ஆம் ஆண்டளவில் உலகின் ஏழ்மையான நாடுகளில் மேலும் 300 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காக 55 கோடி ரூபாய் திரட்டுவதை நோக்கமாக இந்த மாநாடு கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்பட சுமார் 35 நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசாங்க பங்கேற்பாளர்கள் உள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸில் பேசுகையில், “தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முக்கியமான பணியில் இந்தியாவின் ஆதரவை உலகம் நம்பலாம். ஏனெனில் இந்தியா தடுப்பூசி உற்பத்தியில் உலகின் நான்காவது பெரிய நாடாக திகழ்கிறது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முழு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்திரதனுஷ் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. (இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்)
மேலும், உலகின் 60 சதவீத குழந்தைகளுக்கு நோய்த்தடுப்புக்கு பங்களிப்பு செய்வது எங்களுக்கு அதிர்ஷ்டம். சர்வதேச தடுப்பூசி கூட்டணியின் (GAVI) வேலையை இந்தியா அங்கீகரித்து மதிப்பிடுகிறது. அதனால்தான் நாங்கள் சர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு நன்கொடையாளர்களாக மாறினோம். சர்வதேச தடுப்பூசி கூட்டணி என்பது ஒரு உலகளாவிய கூட்டணி மட்டுமல்ல. இது உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாகவும், மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம், நாமும் நமக்கு உதவ முடியும் என்பதை நினைவூட்டுவதாகவும் அமைகிறது” என்றார்.
மேலும், “இந்த சர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு இந்தியா தனது பங்காக 113 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இதற்கிடையில், உச்சிமாநாட்டிலிருந்து திரட்டப்படும் நிதி போலியோ, டிப்தீரியா மற்றும் அம்மை போன்ற கொடிய நோய்களிலிருந்து 8 மில்லியன் குழந்தைகளைப் பாதுகாப்பதும் கரோனா வைரஸிலிருந்து உலகளாவிய மீட்சியை உறுதிப்படுத்தவும் உதவும் என்று இங்கிலாந்து அரசு கூறியது.
இதையும் படிங்க: கோவிட்-19 மருந்து: மரபணு ஆராய்ச்சியில் முதல் வெற்றி...!