பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார். ரியாத்தில் அந்நாட்டின் மன்னரான சல்மான் பின் அப்துலாசிஸை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.
அங்கு நடைபெறவுள்ள எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் மூன்றாவது அமர்விலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு சவுதி அரேபியா தனது ஆதரவை தெரிவித்திருந்தது. இந்நிலையில், மோடியின் இந்தப் பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா நல்லுறவைப் பேணிவருகிறது. இந்தியாவின் தனியார் நிறுவனங்களில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்திருந்தார். பாதுகாப்பு, கலாசாரம், வர்த்தகம், கல்வி உள்ளிட்டவைக்கு பேச்சுவார்த்தையின்போது முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கான பெண் காவலர்களின் எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு