நெகிழிப் பயன்பாட்டை பெரிய அளவில் குறைக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஆனாலும் நாடு முழுவதும் நெகிழிகளை ஒழிக்க முடியாமல் அரசும் தன்னார்வலர்களும் திணறிவருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க தொடங்கிவிட்டது. அதற்கான வழிவகைகளை அப்போதே யோசிக்க ஆரம்பித்த பிள்ளையார்குப்பம் கிராமம் இதற்காகப் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சார்பில் அப்போதிருந்த கிராம கவுன்சிலர்கள், உறுப்பினர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
அக்குழு மூலம் அங்குள்ள மக்களுக்கு துணி, காகிதம் ஆகியவற்றைக்கொண்டு பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள டீக்கடைகள், மளிகை வணிகம் ஆகியவற்றில் நெகிழிப் பயன்பாட்டை அறவே ஒழிக்க அறிவுறுத்தப்பட்டு மக்கள் ஒத்துழைப்புடன் அவர்கள் உற்பத்திசெய்த பைகளை கடைகளுக்கு வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக கிராமப் பகுதியில் நெகிழி இல்லாத கிராமமாக இன்றுவரை நிமிர்ந்து நிற்கிறது.