கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு கொண்டுச் சேர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதனிடையே, மகாராஷ்டிராவிலிருந்து 125 ரயில்கள் இன்று இயக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ரயில்கள் எங்கிருந்து எங்கு செல்கிறது, பயணிகளின் விவரங்கள், அவர்களின் மருத்துவ சான்றிதழ்கள் குறித்த விவரங்களை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் வெளியிட வேண்டும் என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், "சோகம் என்னவென்றால், 1.5 மணி நேரம் ஆன பிறகும் கூட திட்டமிடப்பட்ட 125 ரயில்களின் விவரங்கள் குறித்து மத்திய ரயில்வேதுறையின் பொது மேலாளரிடம் மகாராஷ்டிரா அரசு தெரிவிக்கவில்லை. திட்டமிடுதலுக்கு நேரம் எடுக்கும். நிலையங்களில் ரயில்கள் காலியாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. விவரங்கள் அளிக்காமல் திட்டமிடமுடியாது" என பதிவிட்டுள்ளார்.