நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைகளைத் தவிர வேறு எதுக்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால் செய்வதியறியாது திகைத்து வரும் மக்கள் சிலர் பழைய பாடல்கள், விரும்பிய திரைப்படங்களை பார்த்துக்கொண்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலே சென்று மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள டைல்ஸ் எண்ணிக்கை எண்ணுவது, மேரி கோல்டு பிஸ்கெட்டில் எத்தனை துவாரங்கள் உள்ளது என்று எண்ணுவது போன்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதனை பெருமையாக வேறு சமூக வலைதளங்களில் பதிவாக போடுகிறார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட விரும்பாத மக்கள் சிலர் பழங்கால சீரியலான ராமாயணத்தை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினர். இதனை ஏற்று தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு முறையும் பின்னர் இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.