இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். பின்னர், அங்கிருந்து காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, "பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், மக்கள் சார்ந்த இருநாட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
இரு நாடுகள் தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களை மேம்படுத்துவது நட்புறவை வளர்ப்பதற்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரு நாடுகள் முடிவெடுத்துள்ளன.
வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையை இருநாட்டு அமைச்சர்கள் மேற்கொண்டனர். அதற்கு சட்ட வடிவம் கொடுக்க பேச்சுவார்த்தையில் முடிவெடுத்துள்ளோம். பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். மக்களின் நட்புறவே இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய அடித்தளம்" என்றார்.
இதையும் படிங்க: ’இந்தியர்களின் அன்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ - மெலனியா ட்ரம்ப்