கிழக்கு லடாக் விவகாரத்தில் சீனாவின் அத்துமீறல் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “ராணுவ உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது சீனா கடுமையாக நடவடிக்கையை எடுக்கிறது. சீனர்கள் லடாக்கில் இந்திய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் பிரதமர் முற்றிலும் அமைதியாக இருக்கிறார். இந்த வன்முறை காட்சிகளிலிருந்து தலைமறைவாகிவிட்டார்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு மற்றொரு ட்வீட் வாயிலாக பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “சர்வதேச விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்புகிறார்” என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான மணீஷ் திவாரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “எல்லைப் பிரச்னைகள் குறித்து கேள்வியெழுப்பினால் அதற்கு பதில் கூறாமல் மத்திய அமைச்சர் கடுமையான மொழிகளை பயன்படுத்துகிறார்.
இதுபோன்ற மொழிகளை பயன்படுத்த மத்திய அரசாங்கம் அவரை சட்ட அமைச்சராக நியமித்துள்ளது. ஆளும் கட்சியை கேள்வி கேட்க அத்தனை உரிமைகளும் எதிர்க்கட்சிக்கு உண்டு. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஆளுங்கட்சியினர் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும்.
அந்த வகையில், நாட்டு மக்களின் தேசிய கோபத்தை நாங்கள் அவருக்கு சொல்ல விரும்புகிறோம். தேசப் பக்தி, தேசியவாதம் ஆகியவை பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு பிரத்யேகமாக உரியது அல்ல. நாட்டின் நிலைமையை மீட்டெடுக்கவும், கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள பாங்கோங் தசோ ஏரியிலிருந்து சீன ராணுவத்தை அகற்றவும் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? சீனத் துருப்புக்கள் எவ்வளவு பின்வாங்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறோம்.
இதற்கிடையில், இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதை இயல்பாக்க முயற்சிகள் நடக்கிறது. நாட்டின் எல்லையில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை குறித்து பிரதமர் அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியர்களும் நினைக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அத்தகைய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை” என்றார்.
மேலும் இந்தியா- சீனா பிரச்னை குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, 2013ஆம் ஆண்டு பாஜக பேரணியில் ராஜ்நாத் சிங் பேசிய காணொலி காட்சி ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இதையும் படிங்க: இந்திய - சீன ராணுவத்தினர் இடையே சூஷுலில் பேச்சுவார்த்தை