டெல்லி:கோவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் அதன் மேலாண்மை குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சகத்தின் அலுவலர்கள் மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுடன் புதன்கிழமை (ஆக.19) சந்திப்பை நடத்துவதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவானது சுகாதார அமைச்சக அலுவலர்கள் மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள்' குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 19ஆம் ம் தேதி குழு கூடும் என்று மாநிலங்களவைக்கான வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையில் இந்தக் குழு நடைபெறுகிறது. மேலும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில், கரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுவது குறித்தும், மேலும், கறுப்பு சந்தையில் மருந்து விற்பனை குறித்தும் குழு உறுப்பினர்கள் அலுவலர்களிடம் விவாதித்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால அமர்வுக்கு தகுந்த இடைவெளியை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்படுவதற்கு தயாராகி வருவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 79 புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து செவ்வாய்க்கிழமை நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியுள்ளது.