தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 31, 2020, 3:30 PM IST

Updated : May 31, 2020, 7:07 PM IST

ETV Bharat / bharat

'ஏழைகளின் வலியை விளக்க வார்த்தைகள் இல்லை' - பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

கரோனாவால் அனைத்து வகுப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏழைகள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; அவர்களுக்கு உதவ அனைத்துத் தரப்பினரும் பாடுபடுகிறார்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' உரையில் வேதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, அமலில் உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் ஏழை எளிய மக்களும், தொழிலாளர்களும்தான் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர் என்றும், அவர்களின் வலியை வார்த்தைகளில் விளக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேதனைத் தெரிவித்துள்ளார்.

மாதம்தோறும் நடைபெறும் தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 'கரோனாவால் அனைத்து வகுப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏழைகள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ அனைத்துத் தரப்பினரும் பாடுபடுகிறார்கள்' என்று தெரிவித்தார்.

ஏராளமான குடிபெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் ரயில்வே துறையின் செயல்பாடுகளை எடுத்துரைத்த அவர், "பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதி தற்போது இயங்கத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், நாம் மேலும் அதிக எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியம். ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் இந்த வேளையில், தகுந்த இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசங்கள் அணிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து 'இந்த கரோனா நெருக்கடி காலகட்டத்தில் நமது சிறிய வியாபாரிகள் தொடங்கி, ஸ்டார்ட்அப்புகள், பரிசோதனைக் கூடங்கள் என பலரும் கரோனாவுக்கு எதிரான இந்தப்போரிலேயே பல புதிய கண்டுபிடிப்புகளையும், வழிமுறைகளையும் கண்டறிந்து உபயோகித்து வருகிறார்கள். இதுவே என் மனதைக் கவர்ந்த விஷயம்' என்றும் தெரிவித்துள்ளார், பிரதமர் மோடி.

'நெருக்கடியின்போது ஏழைகள் சந்தித்து வரும் பிரச்னைகள் வரும் காலத்திற்கான படிப்பினைகளை வழங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் மற்ற பிராந்தியங்களை விட கிழக்குப் பிராந்தியம் பின்தங்கியிருப்பதை இந்த பெருந்தொற்று காலம் உணர்த்தியுள்ளது. இருளில் ஒளியை நோக்கி, முன்னேறுவது தான் மனிதனின் இயல்பு. அது போல தற்சார்பு பாரதம் தொடர்பாக, இன்று நாடு முழுவதிலும் பரவலாக மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். விரைவில், அதை தங்களுடையதாக்கி தலைமை ஏற்பர்' என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களில் சூப்பர் புயலான ஆம்பனின் கோரத்தாண்டவம், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஆகியவை குறித்து வேதனைத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ’அனைவரும் இணைந்து நமது விவசாயத்துறையைப் பாதித்திருக்கும் இந்தச் சங்கடத்தை எதிர்கொள்வோம். நாட்டு வளங்களைப் பாதுகாப்போம்' என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

'தற்போது உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் (vocal for local) என்ற கொள்கைக்கு மக்கள் ஊக்கம் அளித்து வருகிறார்கள். இந்தியாவில் தயாரிப்போம் என்ற உறுதிபாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அவரவர் தங்களுடைய உறுதிபாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். நாட்டின் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குச் சேவை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் பயனாளிகளைத் தவிர, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா உலகின் பல பகுதிகளை விட, சிறப்பாக செயல்படுவதையும், பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் பலமடங்கு அதிக மக்கள் தொகைக் கொண்ட நம் நாட்டில், கரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.

சேவையே தலையாய அறம், என்பதை உணர்ந்து செயல்படும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் சேவை உணர்வைப் பாராட்டியுள்ள பிரதமர், தனது மகளின் படிப்புக்கு என சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி வரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முடிதிருத்தும் நிலையம் நடத்தும் சி. மோஹன் என்பவரைப் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஒரு வருடத்தை நிறைவு செய்த மோடி 2.0: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்

Last Updated : May 31, 2020, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details