மத்திய அரசு, நடைபெற்றுவரும் குளிர்கால கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றியது.
இதனால் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை பயனற்றதாக போய்விடும் என்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம்கூட பாதிக்கப்படும் என்றும் பஞ்சாப், ஹாரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் விவசாயிகள் மசோதா 2020க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜினாமா செய்தார்.
இந்த மசோதாக்கள் மீது நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் இந்த விவசாய மசோதாக்களுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மூலம் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமரும் பிற அமைச்சர்களும் உறுதியளித்துள்ளனர். ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? எந்த விவசாயி எந்த வர்த்தகருக்கு எதை விற்றார் என்பதை அரசு எவ்வாறு அறிந்து கொள்ளும்?
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தினமும் லட்சக்கணக்கான தனியார் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. இந்த அனைத்து பரிவர்த்தனைகளிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையாக பின்பற்றப்படுகிறது என்பதற்கு அரசு எவ்வாறு உத்தரவாதம் அளிக்கும்?
தனிப்பட்ட முறையில் நடைபெறும் ஒரு விற்பனையில் வணிகர் ஒருவர் கட்டாயம் குறைந்தபட்ச ஆதரவு விலையை பின்பற்ற வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது? மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
தனிப்பட்ட முறையில் நடக்கும் விற்பனைகளில் குறைந்தபட்ச ஆதரவு விலை பின்பற்றப்படும் என்று உத்தரவாதம் அளிப்பது, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதியைப் போன்றது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்' - திருச்சி சிவா விமர்சனம், கடும் அமளியில் மாநிலங்களவை!