கடந்த சில நாள்களாகவே இந்தியா - சீன எல்லைப பகுதிகளில் பதற்றம் நீடித்துவந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி சீன ராணுவம் லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில், ஆணி போன்ற கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை இந்தியா- சீனா விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோ டி நடத்தினார்.
பிரதமரின் கருத்துகளும், அமைச்சர்கள், ராணுவத் தளபதி உள்ளிட்டோர் வழங்கும் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவாறு உள்ளதாக மீண்டும், மீண்டும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றஞ்சாட்டிவருகின்றன.
நாட்டின் பல்வேறு கட்சியினரும், இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சீன விவகாரம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.