மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (ஜூன் 17) முதல் ஜூலை 26 வரை நடக்கவுள்ளது.
நாளை கூடுகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - வேலைவாய்ப்பின்மை
டெல்லி: வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டெரிக் ஓ பிரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, வறட்சி ஆகியவை குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. கூட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.