ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் விருது வழங்குகிறது. இந்த ஆண்டு 15 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டபோது ஊரடங்கின் நிலையைப் பதிவு செய்தஇந்திய நிர்வாக காஷ்மீர் குறித்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்புக்காக, இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர்கள் சன்னி ஆனந்த், முக்தார்கான் மற்றும் தார் யாசின் ஆகிய மூவருக்கும் சிறப்பு புகைப்படத்தொகுப்பு பிரிவில், 2020ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அதில் கான் மற்றும் யாசினுக்கு வழங்கப்பட்ட விருதுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருவருக்கும் வழங்கப்பட்ட விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட நபர்கள் புலிட்சர் நிர்வாகத்திற்கும், விருது வழங்கும் நடுவர் குழுவுக்கும் திறந்த மடலொன்றை எழுதியுள்ளனர்.
அதில், 'முக்தார் கான் மற்றும் தார் யாசின் ஆகிய இருவருக்கும் விருது வழங்குவதன் மூலம் புலிட்சர் நிர்வாகம் பொய்களை ஊக்குவிக்கிறது. உண்மைகளைத் தவறாக சித்தரிக்கிறது மற்றும் பிரிவினைவாதத்தை கொள்கையாக கொண்டுள்ளவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இருவரும் தங்களது புகைப்படங்களின் தலைப்புகளில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர்.
புலிட்சர் பரிசின் நோக்கம் இலவச பத்திரிகையை ஊக்குவிப்பதுதானே தவிர, பொய்யை ஊக்குவிப்பதல்ல. தார் யாசின் மற்றும் முக்தார் கான் போன்ற புகைப்படக் கலைஞர்களுக்கு பரிசை வழங்குவதன் மூலம், நீங்கள் பொய்களின் தொகுப்பை, தவறாக சித்தரித்தலை, பிரிவினைவாதம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறீர்கள்.