வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை சொந்த ஊர் அழைத்துவரும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன்படி கப்பல் வழியாக மீட்கும் திட்டமான சமுத்திர சேதுவை கடந்த மே 8ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியது. இதுவரை இலங்கை, மாலத்தீவுகளில் சிக்கியிருந்த 2,874 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய கப்பற்படையைச் சேர்ந்த கப்பல் ஈரானில் உள்ள பந்தார் அப்பாஸ் துறைமுகத்தை நேற்று (திங்கள்) காலை சென்றடைந்தது.
பந்தார் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய கப்பற்படைக் கப்பலானது குஜராத் போர்பந்தருக்கு வந்து சேரும். ஈரான் அரசாங்கம், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறது. மேலும், இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ள குடிமக்களுக்கு மருத்துவ பரிசோதனையை செய்கிறது.
இந்திய குடிமக்களுக்கு வழங்குவதற்காக முகக்கவசம் உள்ளிட்ட பொருள்களை இந்திய கப்பற்படை கைவசம் வைத்துள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் கப்பலில் உள்ளனர்.