டெல்லியின் பஞ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பலத்த காயங்களுடன் வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளது உறுதியானதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20க்கும் அதிகமான காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், சிறுமியை பலமான தாக்கியது மட்டுமின்றி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளி கிருஷ்ணாவை காவல் துறையினர் கைது செய்தனர்.
குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணா கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில், சிறுமி பார்த்து சத்தம் போட்டுள்ளார். உடனடியாக பயந்த கொள்ளையன், கையிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து சிறுமியை பலமுறை தாக்கியுள்ளான். இதில், சிறுமியின் தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுதையும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது, கிருஷ்ணாவிடம் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பலத்த காயமடைந்த சிறுமிக்கு, தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவா இருவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதே போல், காங்கிரஸின் டெல்லி பிரிவுத் தலைவர் சவுத்ரி அனில் குமாரும் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து தேவையான உதவியை செய்வதாக உறுதியளித்தார். முன்னதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "இச்சம்பவம் என்னை பெரிதும் உலுக்கிவிட்டது. இத்தகைய குற்றங்களை செய்தவர்கள் சுதந்திரமாக நடக்க அனுமதிக்கக்கூடாது எனப் பதிவிட்டிருந்தார். மேலும், சிறுமியின் குடும்பத்தினருக்கு உதவி தொகையாக, ரூ 10 லட்சம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.