ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா இருந்தபோது அரசியல் ஆலோசகராக இருந்த சாதிக் என்பவர் கிரேட்டர் காஷ்மீர் என்ற செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள மெஹபூபா முப்தி, அலி முஹம்மது சாகர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுவிக்கவும், யூனியன் பிரதேசத்தில் அரசியல் செயல்முறையை மீண்டும் தொடங்க அனுமதிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கட்டுரையில், 370 பிரிவு நீக்கப்பட்டது குறித்து எவ்வித குறிப்பும் இல்லாதது தன்னுடைய மனதில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளதாக குறிப்பிட்டு அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மெஹ்தி, தேர்தல் மட்டும்தான் உங்களுக்கான அரசியல் செயல்முறையா? என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது மட்டுமே பிரதான அரசியல் கட்சிகளின் ஒரே இலக்காக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் தொடங்கியது. "வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து கருத்து தெரிவிப்பது எளிதானது. அவ்வப்போது சிலர் தங்களை தைரியமானவர்களாக காட்ட ட்வீட் செய்வார்கள்" என மெஹ்தியின் கருத்தை சாதிக் விமர்சித்திருந்தார்.