இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியர்களின் தனியுரிமை ஆகியவற்றுக்கு ஆபத்தை ஏற்படும் வகையில் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி மத்திய அரசு 59 சீனச் செயலிகளுக்குக் கடந்த மாதம் இறுதியில் தடைவிதித்தது.
மத்திய அரசின் தடை குறித்த அறிவிப்பு வெளியானதும், இணையத்தில் இந்தச் செயலிகள் அதிகளவில் தேடப்பட்டுள்ளன. அதாவது தடைவிதிக்கப்பட்ட ஜூன் 29ஆம் தேதி, டிக்டாக் செயலியின் தேடல் 229 விழுக்காடும் வீ-சாட் செயலியின் தேடல் 255 விழுக்காடும் அதிகரித்துள்ளன. அதேபோல, வெய்போ, ஷேர்இட், யூ.சி.பிரவுசர் ஆகிய செயலிகளின் தேடல் முறையே 57, 78, 82 விழுக்காடு அதிகரித்ததாக SEMrush என்ற சைபர் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அடுத்தடுத்த நாள்களில் சீனச் செயலிகள் குறித்த தேடல் என்பது கணிசமாகக் குறைந்துள்ளது. ஜூன் 30ஆம் தேதி டிக்டாக் தேடல் 23 விழுக்காடு வரை குறைந்துள்ளது. அதேபோல ஷேர்இட், யூ.சி.பிரவுசர் ஆகிய செயலிகளின் தேடலும் முறையே 11, 12 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
அதேபோல ட்விட்டரில், #RIPTikTok என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி 18,185 ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றில் 19 விழுக்காடு நேர்மறையானதாகவும், 62 நடுநிலையானதாகவும், 19 விழுக்காடு எதிர்மறையானதாகவும் இருந்துள்ளன. அதேபோல, ஷேர்இட் குறித்து பதிவிடப்பட்ட 2,054 ட்வீட்களில் 23 விழுக்காடு நேர்மறையானதாகவும், 38 விழுக்காடு நடுநிலையானதாகவும், 39 விழுக்காடு எதிர்மறையானதாகவும் இருந்துள்ளன.