ஹைதாராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விசாரித்ததில், திட்டமிட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மகபூப்நகர் விரைவு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நீதிபதி இல்லாத காரணத்தாலும் காவல் நிலையத்தைச் சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவுவதாலும் ஷாத்நகர் காவல் நிலையத்தில் நால்வர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்னர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து நால்வரை விசாரிக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு இணையான வட்டாட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரை ஷாத்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது காவல் துறையினர் மீது பொதுமக்கள் செருப்பு வீசினர்.