அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதங்களில் மத்திய அரசு அமைத்திட வேண்டும் எனவும் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியும் உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்தியாவின் ஜனநாயகம் வலிமையானது எனவும் உயிர்ப்புடையது என்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் நாட்டு மக்கள் அதைப் பின்பற்றி ஒற்றுமையுடன் முன்னின்று அமைதியை நிலைநாட்டிவருகின்றனர்.
இந்தியாவின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை. இன்று அந்த சிறப்பம்சம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பொன்னான வரலாற்றை இந்திய நீதித் துறை படைத்துள்ளது.
நவம்பர் 9ஆம் தேதி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். பெர்லினின் சுவர் இடிக்கப்பட்டு, வெவ்வேறு பிரிவுகளின் வேற்றுமை நீக்கப்பட்டு ஒற்றுமையை அது நிலைநிறுத்தியது. அதேபோல் இன்று, இந்தியா - பாகிஸ்தான் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமான கர்தார்பூர் வழித்தட சேவை தொடங்கப்பட்டுள்ளது.