17ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நூறு பெண் வேட்பாளர்கள் மீது ட்விட்டரில் பதியப்பட்ட, பதியப்படும் ட்ரோல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியா நூறு தன்னார்வலர்களை கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்தக் கண்காணிப்புக் குழு, மக்களவையில் போட்டியிட்டபெண் வேட்பாளர் மீது ட்விட்டரில் ஏவப்பட்ட, ஏவப்படும் ட்ரோல்கள் எந்த அளவுக்கு இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஆய்வு நடத்தவுள்ளது.
இணையதளத்தில் முக்கிய பெண் வேட்பாளர்கள் எந்த அளவுக்கு/வகையில் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதையும், அந்த ட்ரோல்கள் அவர்களுடைய கருத்து சுதந்திரத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆதாரத்துடன் சேகரித்து உரிய நடவடிக்கை எடுப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இது குறித்து அம்னெஸ்டி இந்தியா, 'இணையதள இழிவுபடுத்தலுக்கு பெண் அரசியல்வாதிகளே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ட்விட்டரில் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக பதிவிடப்படும் ட்ரோல்கள் மனித உரிமை மீறலாகும்' எனத் தெரிவித்துள்ளது.