அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படை தளத்திலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஜூன் 3 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. இதில் எட்டு விமானப்படை வீரர்கள், ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணித்தனர். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மெச்சுக்கா பாதுகாப்புப்படை தளத்திற்குச் செல்லும் வழியில் திடீரென மாயமான இந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது. இதில் இந்திய விமானப்படை, கப்பற்படை போர் விமானங்கள், ஏ.எல்.ஹெச் பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
விமானம் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்துவந்தது. தொடர்ந்து அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிக்காப்டர், காணாமல்போன விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக விமானப்படை இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்தது.