ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுர்லபலெம் (Surlapalem) என்னும் கிராமம் மலைப்பகுதியை ஒட்டிய பகுதியாகும். இந்த கிராமத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் வெங்கட்டரமணா என்பவர் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
சுர்லபலெம் கிராமத்தையொட்டி உள்ள மலைப்பகுதில் தார்ச்சாலைகள் இல்லாததால், சாலைகள் கரடு முரடாக காணப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில், சாலைகள் சகதியாகிவிடும். இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருந்துவருகிறது.
வெங்கட்டரமணா சுர்லபலெமில் உள்ள பள்ளிக்கு நாள்தோறும் தனது இருசக்கர வாகனத்தில் வந்து-சென்றுகொண்டிருந்தார். தற்போது மழைக்காலம் என்பதால், இருசக்கர வாகன ஓட்டிச் செல்ல முடியாமல் போனது.
இதையடுத்து, பள்ளிக்கு சில நாட்கள் நடந்துசென்று வந்துள்ளார். ஆசிரியரின் சிரமம் கருதி அக்கிராம மக்கள் அவருக்கு ஒரு குதிரையை பரிசாக அளித்தனர்.
பள்ளிக்கு குதிரையில் சென்றுவரும் ஆசிரியர்! ஏற்கனவே, குதிரை ஓட்டத் தெரிந்த வெங்கட்டரமணா தற்போது நாள்தோறும் குதிரையில் பள்ளிக்கு எளிதில் வந்துசெல்கிறார்.